பெரம்பலூரில் நடந்த குரூப்-4 மாதிரி தேர்வு
குரூப் 4 மாதிரி தேர்வு
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-4 போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.
குரூப்-1 போட்டி தேர்வுக்கு 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், குரூப்-4 போட்டி தேர்வுக்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் வரும் ஜூன்9-ந்தேதி குரூப்-4 தேர்வு நடக்க உள்ளது. இதையொட்டி குரூப்-4 போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் மாநில அளவிலான கட்டணமில்லா முழு பாட 6 மாதிரி தேர்வுகளில், 2 தேர்வுகள் ஏற்கனவே மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 17, மற்றும் 21-ந் தேதிகளில் குரூப் நடந்த நிலையில். 3-வது மாதிரி தேர்வு இன்று நடைபெற்றது.
இதில். மாணவ- மாணவிகளுக்கு 300 மதிப்பெண்களுக்கு 200 வினாக்கள் அடங்கிய வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, ஓம்.எம்.ஆர். விடைத்தாளில் பதில் அளிக்கும் முறையில் தேர்வு நடத்தப் பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 64 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தேர்வினை எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய மாதிரி தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் தமிழ் பாக்யா செய்திருந்தார். இதேபோல் குரூப்-4 மாதிரி தேர்வு வருகிற மே -27, மே - 30, மற்றும் ஜூன் -1-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள மாணவ-மாணவிகள் தங்களின் புகைப்படம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.