பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில் : வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் – யாம் பெரிதும் வல்லோமே என்று வலிமை சொல் வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வான்று எளிது. என்ற பாடலில் தூக்கணாங்குருவி கூடு, தேன்கூடு, கரையான் புற்று உள்ளிட்ட சிறிய உயிரினத்தின் கூடுகள் தனிச்சிறப்பானவை என ஒவ்வையார் குறிப்பிடுகிறார்.
ஒரு உயிரி செய்யக்கூடிய செயலை, மற்றொரு உயிரி செய்ய முடியாது என்பதுதான் இயற்கையோடு படைப்பு. ஒவ்வொரு சிறிய உயிரினங்கள் முதல் பெரிய உயிரினங்கள் வரை அனைத்து உயிரினங்களுக்கும் தனிப்பண்புகள் உள்ளன. அது போல் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு தனித்திறமைகள் உள்ளன. யாரோ ஒருவர் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டார்கள் என்பதற்காக பெரிதாகவும், தேர்ச்சி பெற முடியாதவர்களை சிறியதாகவும் எண்ண வேண்டாம். ஏனென்றால் ஒவ்வொரு உயிரிக்கும், ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமான பண்புகள் இருக்கின்றன. ஆனால், உங்களுக்கு என்ன திறமை இருந்தாலும் அந்த திறமையை இந்த உலகத்திற்கு வெளிக்காட்டவும், அந்த திறமையின் மூலமாக பணம் சம்பாதித்து, உங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்தவும், அந்த திறமையின் மூலமாக புகழ் அடைய வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை கல்வியறிவு மிக மிக அவசியம். நடிகர், நடிகை, கிரிக்கெட் வீரர் என நமக்கு பிடித்த புகழின் உயரத்தில் இருக்கக்கூடிய யாராக இருந்தாலும், அவர்கள் பின்புலத்தை பார்த்தோம் என்றால், அந்த வெற்றிக்காக அவர்கள் பல தோல்விகளை கண்டிருப்பார்கள்.
உங்களால் தற்போது பெற்றுள்ள மதிப்பெண் பட்டியலை மாற்ற முடியாது. அதை மறந்து விட வேண்டும். அதற்கு அடுத்ததாக வேறு என்ன செய்ய வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக நடத்தப்படும் தனித்தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே 11 ஆம் வகுப்பில் சேரலாம். வருகின்ற மாதங்களில் கொஞ்சம் முயற்சி செய்தால், நீங்கள் தேர்ச்சி பெற முடியும். பெற்றோர்களும்; குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். எனவே 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இது வாழ்க்கையின் தொடக்கமே என்பதை மனதில் கொண்டு தற்போதை விட எதிர்வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.