சாலையை சூழ்ந்த கருவேல மரங்கள் - அகற்றிய முன்னாள் மாணவர்கள்
புதர்கள் அகற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கடற்கரை சாலை முழுவதும் கருவேலமரங்கள் சூழ்ந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால் இந்த சாலை வழியாக நடைப்பயிற்சி செல்வோரும் மீன்பிடி தொழிலாளர்களும், மீன் வியாபாரிகளும், பனைத்தொழிலாளர்கள் மற்றும் காதர்சாகிப் பள்ளிவாசல், குதிரைமொழி, பாண்டியன்நகர் ஆகிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
மிக நீளமான இந்த கடற்கரையில் நாள்தோறும் சுற்றுலாத்தளம் போல் பொதுமக்கள் மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுடன் அதிக அளவில் வந்து செல்வதால் புதர் மண்டிப்போயுள்ள இந்த பகுதிகளில் கொடிய விஷம் உள்ள உயிரினங்களால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை குறைவானது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கன்னிராஜபுரம் அரசினர் மேல்நிலை பள்ளியில் 1995 - 1999ம் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவிகள் இணைந்து தங்களின் சொந்த செலவில் கருவேல மரங்களை அகற்ற முடிவு செய்தனர்.
இதனையடுத்து நரிப்பையூர் செண்பகபாண்டியன், ரியாஸ்கான், ஆதில், சுலைமான் ஆகியோர் முன்னிலையில் 5 கிமீ தூரம் கடற்கரை சாலையில் புதர் மண்டிக்கிடந்த கருவேல மரங்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர். தன்னார்வத்துடன் தொண்டு செய்த முன்னாள் மாணவர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள். மேலும் தெற்கு நரிப்பையூர் கடற்கரையில் செயல்பட்டு வந்த கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் இருந்த அலுவலகம் முன்பிருந்து காட்டுப்பள்ளி வாசல் குதிரை மொழி கிராமம் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்தால் மீன்பிடி தொழிலாளர்களும் மீன் வியாபாரிகளும் தங்களது வாகனங்களில் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இருக்கும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவித்தனர்.