சினிமா பாணியில் அடியாட்களை ஏவிய ஒப்பந்ததாரர்

சினிமா பாணியில் அடியாட்களை ஏவிய ஒப்பந்ததாரர்

கோப்பு படம்

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை மேலாளரை அச்சுறுத்த அடியாட்களை ஏவிய ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.

கவரைப்பேட்டை அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன் (45). கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை பொது மேலாளர். இம்மாதம், 9ம் தேதி வேலை முடிந்து தன் ஷிப்ட் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தச்சூர் அருகே பின்னால் வந்த கார் ஒன்று சீனிவாசன் கார் மீது மோதியது. காரில் இருந்து நான்கு பேர் சீனிவாசனிடம் தகராறு செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

ரவுடிகள் போல் இருந்ததால், பணம் தர சம்மதித்த சீனிவாசன் ஏ.டி.எம்.,யில் எடுத்து தருவதாக தெரிவித்துள்ளார். நான்கு பேரில் ஒருவர் சீனிவாசன் காரில் ஏறிக்கொண்டு ஏ.டி.எம்., நோக்கி சென்றார். சற்று தொலைவில் காரை நிறுத்தி சீனிவாசனை தாக்கி கீழே இறக்கிவிட்டு காரை ஓட்டி சென்றனர். அந்த காரில் சீனிவாசனின் மடிகணினி, உடமைகள் சில இருந்தன.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகையை சேர்ந்த குமரவேல், 47, அம்பத்துார் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த தியாகராஜன், 65, சென்னை கொளத்துார் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், 43, ஆகிய மூவரை கைது செய்தனர். விசாரணையில், சீனிவாசன் வேலை பார்க்கும் தொழிற்சாலையில், குமரவேல் என்பவர் ஒப்பந்ததாரராக இருக்கிறார். குமரவேல் தில்லுமுல்லுகளை புதிதாக வேலைக்கு சேர்ந்த சீனிவாசன் தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த குமரவேல், சீனிவாசனை அச்சுறுத்தும் விதமாக, தியாகராஜனை அணுகியுள்ளார்.

பின்னர் தியாகராஜன் ராம்குமாரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், ராம்குமார், பல குற்ற பின்னணி கொண்ட நான்கு ரவுடிகளிடம் ஏவி விட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார். தலைமறைவாக உள்ள நான்கு ரவுடிகளையும், அவர்கள் எடுத்து சென்ற கார் மற்றும் உடைமைகளை கவரைப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story