வரத்து அதிகரிப்பால் குண்டுமல்லி விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் குண்டுமல்லி விலை சரிவு

குண்டு மல்லி (பைல் படம்)

ஓசூர் மலர் சந்தையில் வரத்து அதிகரிப்பால் குண்டுமல்லி விலை சரிந்து கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யும் குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்களை விவசாயிகள் பறித்து, அதனை ஓசூர் மலர்சந்தை மற்றும் கர்நாடகவிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் ஓசூர் மலர்சந்தைக்கு தினமும் சுமார் 8 டன் மலர்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்படுகிறது.

திருமணம் மற்றும் பண்டிகை சீசன்களில் குண்டுமல்லி மற்றும் சன்னமல்லி அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ 2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும். சீசன் இல்லாத நேரங்களில் அதிகபட்சமாக ரூ.800க்கு விற்பனை செய்வது வழக்கம். தற்போது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், குண்டுமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஓசூர் மலர்சந்தைக்கு வரத்து அதிகரித்து குண்டுமல்லி கிலோ ரூ.250 முதல் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சன்னமல்லியும் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழையால் வரத்து அதிகரிக்கும் என்பதால், குண்டுமல்லியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags

Next Story