தஞ்சாவூர் மாவட்டத்தில் 70 பேர் மீது குண்டாஸ்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டைவிட 2023-ம் ஆண்டில் பதிவான கொலை குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 70 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் துறையின் தொடர் குற்றத்தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த ஆண்டுகளைவிட 2023-ம் ஆண்டு கொலை குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
2023-ம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 51 கொலை குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது 2022-ம் ஆண்டைவிட 23 சதவீதம் குறைவாகும். 2023-ம் ஆண்டு மட்டும் 70 கொடுங்குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 263 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றம் செய்யும் எண்ணம் உடைய 444 நபர்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்கள் குற்றம் புரியாமல் இருப்பதற்கான நன்னடத்தை பிணைப் பத்திரம் கோட்டாட்சியர் மூலம் பெறப்பட்டது.
2023-ம் ஆண்டு மட்டும் 11 சரித்திர பதிவேடு ரவுடிகள் உட்பட மொத்தம் 33 கொலை குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தரப்பட்டுள்ளது. குறிப்பாக, 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டு பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் நகரம் மற்றும் கும்பகோணம் கோட்டங்களில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. 2023-ம் ஆண்டு திறந்தவெளி யில் மது அருந்திய நபர்கள் மீது 1,650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் தொடர்பான தகவல்களை முன் கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாகவும், குற்றம் புரிந்தவர்களை விரைவாக கைது செய்து, அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தந்ததன் காரணமாகவும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொலை குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.