சுங்கச்சாவடி அருகே ஆம்னி பேருந்தில் கடத்தி வந்த 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
இருவரை கைது
பரமத்தி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பரமத்தி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பொன்னுசாமி மற்றும் காவலர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் இருந்து சிலர் மூட்டைகளை இறங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அங்கிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெங்களூரில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 150 கிலோ குட்கா பொருட்களை கொண்டு வந்தது தெரியவந்தது. சுமார் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்த மோகனூர் வட்டம், கே.புதுப்பாளையம், காளிபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் (41), திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த அப்துல்காதர் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் திருச்சி மாவட்டம், மணப்பாறை, பழைய கோட்டையைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் வீரமணி (45), கோவில்பட்டி, முனியசாமி கோவில் பகுதியை சேர்ந்த கண்ணன் (45) மற்றும் நாமக்கல் மாவட்டம், கீழ்சாத்தம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (42) ஆகிய மூன்று பேர்கள் மீதும் பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சிவகுமார், கார்த்திகேயன் மற்றும் அப்துல்காதர் ஆகியோர் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.