வாகனத்தில் கடத்திய குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்

கோவில்பட்டியில் சட்டவிரோத விற்பனைக்காக ரூ.2.25லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸிலி தேவ் ஆனந்த் மற்றும் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று ஆலம்பட்டி மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், கோவில்பட்டி கடலைகார தெருவை சேர்ந்த பூவலிங்கம் மகன் பாண்டிமணி (30), ராமராஜ் மகன் ரகுபதி (29) மற்றும் மந்திதோப்பு ரோடு பகுதியைச் சேர்ந்த மாரிகண்ணன் ரஞ்சித் (33) ஆகிய 3 பேரும் சேர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் பாண்டிமணி, ரகுபதி மற்றும் ரஞ்சித் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.2லட்சத்து 25ஆயிரத்து 930 மதிப்புள்ள 346 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story