பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்ட குட்கா - ராஜஸ்தான் வாலிபர் கைது
சேலம் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் போலீஸ்காரர்கள் ஜெயக்குமார், கார்த்தி ஆகியோர் நேற்று சேலம், சென்னை புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையாப்பட்டி அருகே ஒரு கார் நிற்பது தெரிந்தது.காரின் அருகே போலீசார் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும், காரில் இருந்து வாலிபர் ஒருவர் தப்பியோடி தலைமறைவானார். காரில் இருந்த மற்றொரு வாலிபர் தப்ப முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் காரை சோதனை செய்த போது, அதில் சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதை பிரித்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட 440 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசில் சிக்கியவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 19) என்றும், பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு குட்கா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
மேலும் குட்கா பொருட்கள் கடத்தி வந்த கார் பழுதால் சாலையோரம் நிறுத்தி பழுது பார்த்துக்கொண்டிருந்த போது போலீசில் சிக்கிக்கொண்டதாகவும் கூறினார்.லட்சுமணனை போலீசார் கைது செய்து, ரூ.7 லட்சம் குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தி கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய நாரூன் என்பவரை தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் குஜராத் மாநில பதிவெண் கொண்டது. எனவே குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது பெங்களூருவில் இருந்து தான் கடத்தி வரப்பட்டதா? கடத்தல் கும்பல் தலைவன் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.