கோகுலம் செவிலியர் கல்லூரியில் புற்றுநோயாளிகளுக்கு முடிதானம்
முடி தானம் வழங்கல்
சர்வதேச செவிலியர் தினம் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செவிலியர் தினத்தையொட்டி புற்றுநோயாளிகளுக்கு செவிலியர்கள் முடிதானம் செய்யும் நிகழ்ச்சியை சர்வதேச செவிலியர் கவுன்சில் மண்டல அளவில் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த நிகழ்வை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புற்றுநோயாளிகளுக்கு முடிதானம் செய்யும் நிகழ்ச்சி சேலம் ஸ்ரீகோகுலம் செவிலியர் கல்லூரியில் நடந்தது.
செவிலியர் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் டாக்டர் கே.அர்த்தனாரி தலைமை தாங்கினார். ஸ்ரீகோகுலம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பி.செல்லம்மாள் முதன்மை விருந்தினராகவும், புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.வித்யா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். செவிலியர் கல்லூரி முதல்வர் கே.தமிழரசி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் டாக்டர் ஆர்.ஜாய் கெசியா, செவிலியர் கல்லூரி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.சரவணன், எம்.கனகதுர்கா உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் காமினி சார்லஸ் நன்றி கூறினார்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில் இருந்து செவிலியர்கள் தாமாக முன்வந்து தங்களது முடியை 20 சென்டி மீட்டர் நீளம் மற்றும் அதற்கு மேல் தானம் செய்தனர்.