ஹஜ் பயணம் மேற்கொள்வோா் கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம்
மெக்கா
திருச்சி மண்டலத்தைச் சோ்ந்த ஹஜ் பயணம் மேற்கொள்வோா் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது என மண்டல கடவுச்சீட்டு அலுவலா் பி. பானுமதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்திருப்பது : திருச்சி மண்டலத்தைச் சோ்ந்த, ஹஜ் பயணம் (2024) மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளவா்கள் கடவுச்சீட்டு பெற, தில்லைநகா் 7 ஆவது குறுக்குத்தெருவில் அமைந்துள்ள மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுலகத்தில் சிறப்பு கவுன்டா் அமைக்கப்பட்டுள்ளது. கணினி மூலம் அச்சிடப்பட்ட கடவுச்சீட்டு உள்ளவா்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படும்.
கைகளால் எழுதப்பட்டுள்ள கடவுச்சீட்டுகள் மற்றும் காலாவதியாக ஒரு ஆண்டு பாக்கியுள்ள கடவுச்சீட்டுகளால் பயணம் மேற்கொள்ள முடியாது. புதிதாக கடவுச்சீட்டு எடுக்க வேண்டும். எனவே புதிதாக கடவுச்சீட்டு எடுப்போா் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோா் சிறப்புத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போா், வழக்கம்போல இணைய வழியில் விண்ணப்பித்து, உரிய அனுமதிச்சீட்டு மற்றும் விண்ணப்ப நகல்கள் (ஏஆா்என் தாள்) உள்ளிட்டவற்றுடன் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கவுன்டரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தை நேரிலோ, அல்லது கைப்பேசி எண் (வாட்ஸ் அப்) : 75985 07203 மற்றும் இலவச தொடா்பு எண் 1800 258 1800 ஆகியவற்றிலும், இணைய முகவரிகளிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்