பேராவூரணி - புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் பணி
பேராவூரணி - புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமானப் பணி - தினசரி விபத்தால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், செங்கமங்கலம் அருகே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டுமானப்பணியால், தினசரி விபத்து ஏற்படுவதால் பாலத்தை கட்டி முடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான ஜல்லி, மணல், சிமெண்ட் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு, தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. இத்தனை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் செங்கமங்கலம் மூவேந்தர் மேல்நிலைப்பள்ளி அருகில், சாலையின் குறுக்கே கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால் பாலம் உள்ளது. இந்தப் பாலம் கட்டப்பட்டு சுமார் 50 வருடத்திற்கும் மேலானதாலும், பழமையான குறுகிய பாலமாக உள்ளதாலும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். எனவே, பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு பாலம் கட்டுமானப் பணிக்காக மாற்றுப்பாதை அமைக்காமல், பாலத்தின் ஒருபகுதியை இடித்து விட்டு கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு, ஒரு ஆண்டு கடந்த நிலையில் இதுவரை பணி முடிக்கப்படாமல் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக எந்த பணியும் நடைபெறவில்லை. ஏற்கனவே குறுகிய பாலத்தில் ஒரு பகுதியை இடித்துவிட்டதால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. பாலம் பாதி உடைக்கப்பட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பணி நடைபெறாததால் உடைக்கப்பட்ட பகுதியில் தகரத்தை வைத்து மூடியுள்ளனர். இரவு நேரங்களில் பாலத்தை வாகனங்கள் கடந்து செல்லும் போது, நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது பக்கவாட்டில் உரசி பாலத்திற்குள் விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதும், காயமடைவதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றதில் பாலத்தின் அருகே உயிரிழந்து கிடந்துள்ளார் . எனவே, மேலும் உயிர்ப்பலி ஏற்படும் முன் உடனடியாக பாலம் கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். .