பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகள் - விரைந்து முடிக்க கோரிக்கை

பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகள் - விரைந்து முடிக்க கோரிக்கை

பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி

சோழிங்கநல்லூர் அருகே காரப்பாக்கம் பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகளை மீண்டும் துவங்கி விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழிங்கநல்லுார் மண்டலம், 198-வது வார்டு, காரப்பாக்கம், சப்தகிரி நகர், நேரு தெருவில் நான்கு தெருக்கள் உள்ளன. இங்கு, 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மொத்தம் 30 அடி அகலம் உடைய இந்த தெருக்கள் வழியாக, 600-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்கள் செல்கின்றனர். இங்குள்ள சாலைகளை புதுப்பிக்க, 50 லட்சம் ரூபாய் மாநகராட்சி ஒதுக்கியது. நான்கு மாதங்களுக்கு முன் பணி துவங்கி, பழைய சாலை சுரண்டி எடுக்கப்பட்டது.

மழைக்காலத்தில் வெள்ளம் சூழும் பகுதி என்பதால், ஒரு அடிக்கு ஜல்லிக்கற்கள் கொட்டி உயர்த்தி, தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிக்கு, ஒரே ஒப்பந்ததாரர் நியமிப்பது வழக்கம். ஆனால், ஜல்லி கொட்டி உயர்த்த ஒரு ஒப்பந்த நிறுவனத்தையும், தார் சாலை போட மற்றொரு நிறுவனத்தையும், மாநகராட்சி நியமித்தது. ஜல்லி கொட்டிய நிறுவனம், சாலை மட்டத்தை உயர்த்தாமல் நான்கு மாதமாக அப்பணியை கிடப்பில் போட்டுள்ளது.

இதனால், சுரண்டிய சாலையில், கால் அடி உயரத்தில் ஜல்லி கொட்டி அப்படியே விட்டதால், வாகனங்கள் பழுதடைகின்றன. நடந்து செல்லும், குழந்தைகள், முதியவர்கள் மிவுகம் சிரமப்படுகின்றனர். ஒப்பந்த நிறுவனத்திற்கும், மாநகராட்சிக்கும் இடையே ஏற்பட்டநிர்வாக குளறுபடியால், பணியை பாதியில் நிறுத்தியதாக கூறப்படுகிறது. மாநகராட்சி உயர் அதிகாரிகள் தலையிட்டு, சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story