தஞ்சையில் பயணி தவற விட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு
மன்னை விரைவு ரயிலில் பயணி தவற விட்ட ரூ1.35 லட்சம் மதிப்புள்ள நகைகள், வெள்ளி உள்ளிட்ட பொருள்களை மீட்டு உரியவர்களிடம் காவல் துறையினர் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.
சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு வியாழக்கிழமை சென்ற மன்னை விரைவு ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் இருப்புப்பாதைக் காவல் தலைமைக் காவலர் சித்ரகலா வழக்கமான சோதனை பணியில் ஈடுபட்டார்.
அப்போது முன்பதிவு பெட்டி இருக்கையில் கேட்பாரற்று கிடந்த பையில் 20 கிராம் எடையுள்ள இரு தங்கச் சங்கிலிகள், 9 கிராம் வெள்ளி சங்கு மற்றும் கைப்பேசி, பழைய துணிகள் ஆகியவை இருந்தன.
இதை மீட்ட தலைமைக் காவலர் தஞ்சாவூர் இருப்புப்பாதைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்தப் பை நாகை மாவட்டம் திருக்குவளை தெற்கு பணியூரைச் சேர்ந்த ஹரிஹரன் (34) என்பவருடையது என்பது தெரிய வந்தது.
பின்னர், தஞ்சாவூர் இருப்புப்பாதைக் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வரவழைக்கப்பட்ட ஹரிஹரனிடம் ரூ. 1.35 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பையை காவல் ஆய்வாளர் சாந்தி ஒப்படைத்தார்.
அப் போது உதவி ஆய்வாளர் பாஸ்கரன். சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ், தலைமைக் காவலர் சித்ரகலா ஆகியோர் உடனிருந்தனர்.