கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் பகுதிகளில் வீடு சார்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். விசைத்தறி தொழிலாளர்களுக்கு 50% கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாளொன்றுக்கு ரூபாய் 500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக சங்கரன்கோவிலில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் வரை 2 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி சங்கரன்கோவில் பாடாப் பிள்ளையார் கோவில் முன்பு விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணை தலைவர் மகாலட்சுமி துவக்க உரையாற்றினார்.சங்கரன்கோவில் சிஐடியூ சங்க தலைவர் ரத்தினம், செயலாளர் சக்திவேல் மாவட்ட பொருளாளர் மாணிக்கம், சிந்தாமணி விசைத்தறி சங்க சிஐடியூ சங்க தலைவர் மாரியப்பன், புளியங்குடி விசைத்தறி சங்க தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக் ராஜ், சிஐடியூ மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கரன்கோவில், சிந்தாமணி, புளியங்குடி, சுப்புலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சிஐடியு விசைத்தறி மாநில துணை தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.