ரயிலில் தவறவிட்ட மடிக்கணினி உரியவரிடம் ஒப்படைப்பு

ரயிலில் தவறவிட்ட மடிக்கணினி உரியவரிடம் ஒப்படைப்பு
மடிக்கணினி ஒப்படைப்பு
சென்னையிலிருந்து கும்பகோணம் ரயிலில் வந்த பயணி தவறவிட்ட மடிக்கணினியை மீட்டு தஞ்சாவூர் ரயில்வே புறக்காவல் நிலைய காவ‌ல்துறை‌யின‌ர் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூர் வந்த உழவன் ரயிலில், கும்பகோணம் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த ந.அருண் (29) என்பவர் பயணித்தார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவர் இறங்கும் போது, தன்னுடைய மடிக்கணினி பையை மறந்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் தன்னுடைய மடிக்கணினியை தவறவிட்டது தொடர்பாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் தஞ்சாவூர் ரயில்வே புறக்காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.இதற்கிடையில் தஞ்சாவூருக்கு உழவன் ரயிலில் வந்ததும், ரயில்வே காவலர்கள் அருண் பயணம் செய்த பெட்டிக்குச் சென்று, அங்கிருந்த மடிக்கணினி பையை எடுத்து, அருணை தஞ்சாவூருக்கு வரவழைத்து வழங்கினர். இதனைப் பெற்றுக் கொண்ட அருண் ரயில்வே காவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தங்கக் கொலுசு மீட்பு: தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை மைசூர் செல்லும் விரைவு ரயிலில் தஞ்சாவூர் கீழவாசலைச் சேர்ந்த மகாலட்சுமி (37) என்பவர் ரயிலில் ஏற முயன்றபோது, அவர் காலில் அணிந்திருந்த 12 கிராம் தங்க கொலுசு காலிலிருந்து கழண்டு கீழே ரயில் தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. இதையடுத்து அவர் பிளாட்பாரத்தில் இருந்த காவலர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் உறவினரின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்ட காவலர்கள் அவரை ரயிலில் பயணம் செய்யுமாறு கூறினர். ரயில் புறப்பட்டுச் சென்றதும் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன், தலைமை காவலர் சற்குணமேரி ஆகியோர் அந்த கொலுசை எடுத்து, மகாலட்சுமியின் உறவினரான, தஞ்சாவூர் கீழவாசல் குழந்தைசாமி என்பவரை வரவழைத்து அவரிடம் தங்கக் கொலுசை ஒப்படைத்தனர்.

Tags

Next Story