பனங்கிழங்கு அறுவடை; பொங்கலை ஒட்டி அசத்திய அரசுப் பள்ளி மகிழ்ந்தனர்.

பனங்கிழங்கு அறுவடை; பொங்கலை ஒட்டி அசத்திய அரசுப் பள்ளி மகிழ்ந்தனர்.

சக்கிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், பொங்கலை முன்னிட்டு தாங்கள் விளைவித்த பனங்கிழங்கை அறுவடை செய்து மகிழ்ந்தனர்.  

சக்கிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், பொங்கலை முன்னிட்டு தாங்கள் விளைவித்த பனங்கிழங்கை அறுவடை செய்து மகிழ்ந்தனர்.

பனங்கிழங்கு அறுவடை - பொங்கலை ஒட்டி அசத்திய அரசு பள்ளிக் குழந்தைகள் அண்ணா மற்றும் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் மாணவ, மாணவியரால் பள்ளி வளாகத்திலேயே விதைக்கப்பட்டு பராமரிக்கப்பட்ட பனைவிதையை பொங்கல் திருவிழாவை ஒட்டி பனங்கிழங்கு அறுவடைத் திருநாளாகக் கொண்டாடிய மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் எல்கேபி நகர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர். அதுகுறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

பள்ளிப் பருவத்திலேயே பசுமை எண்ணத்தோடும், விவசாயச் சிந்தனையோடும் மாணவவர்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் எல்கேபி நகர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மாணவ, மாணவியரைக் கொண்ட இளம் விவசாயிகள் குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இவர்களது வேலை பள்ளி வளாகத்தை பசுமையாகவும், தூய்மையாகவும் பராமரிப்பது, மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது, குறு வனங்களை உருவாக்குவது என ஆசிரியர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த அண்ணா மற்றும் அப்துல்கலாம் ஆகியோரது நினைவைப் போற்றி கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி சமூக ஆர்வலர் அசோக்குமார் வழிகாட்டுதலோடு பனைவிதைகள் நடவு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து பராமரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெற்ற அசோக்குமார் இதுகுறித்து கூறுகையில், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் குடுவைகளில் பனைவிதைகளை மாணவர்களைக் கொண்டு நடவு செய்தோம். குழந்தைகளுக்கு பனைமரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். கடந்த செப்டம்பர் மாதம் விதைக்கப்பட்ட பனை விதைகள் அனைத்தையும் இளம் விவசாயிகள் குழுவினரே பராமரித்து வந்தனர். தற்போது நூறு நாட்களைக் கடந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டது. தமிழக அரசின் மாநில மரமான பனை, தற்போது அழிந்து கொண்டிருக்கிறது. இம்முயற்சி காரணமாக அதனை மீட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்களிடம் உருவாக்கியுள்ளது. பனங்கிழங்கு இதுபோன்ற முறையில்தான் நமது விவசாயிகளால் அறுவடை செய்யப்படுகிறது என காட்ட முடிந்துள்ளது. இதன் மூலம் வருங்கால தலைமுறையினர் பனை மரங்களைக் காக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது' என்றார். அலைகுடிகளான சாட்டையடி சமூகம், ஜோசியம் பார்ப்போர், பூம்பூம் மாட்டுக்காரர் போன்றவர்களின் குழந்தைகளுக்காகவே இங்கு அரசால் லட்சுமிகாந்தன் பாரதி நகர் நடுநிலைப்பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தின் மிகச் சிறந்த பள்ளி என்ற விருதை தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி சிறப்பித்துள்ளார். கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரராகவும் அர்ப்பணிப்போடும் செயலாற்றி வரும் இப்பள்ளியின் தலைமையாசிரிர் தென்னவன் கூறுகையில், 'இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் இடைநிற்றலை தற்போது வெகுவாகக் குறைத்துள்ளோம். இதற்காக பல்வேறு முயற்சிகளை ஆசிரியர்களோடு இணைந்து மேற்கொண்டு வருகிறோம். வகுப்பைத் தாண்டிய இணை செயல்பாடுகள் காரணமாக மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு நாள் தவறாமல் வரத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த இளம் விவசாயிகள் படை. பள்ளி வளாகத்தின் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

மரங்கள் அடர்ந்த சோலையாக பள்ளி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த செப்டம்பர் மாதம் பனைவிதைகள் நடவு செய்யப்பட்டன. அதற்கான அறுவடைத்திருநாளைத்தான் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாங்கள் இன்று கொண்டாடி மகிழ்ந்தோம். அறுவடை செய்யப்பட்ட பனங்கிழங்குகளை மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு பரிசாக வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்' என்றார். பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் ஆசி அமீது மற்றும் 6-ஆம் வகுப்பு பயிலும் சாதனா ஆகியோர் கூறுகையில், நாங்களே நட்ட பனைவிதைகளை 100 நாட்களுக்குப் பிறகு இன்று அறுவடை செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதனை எங்கள் ஆசிரியர்களுக்கே பரிசாக வழங்கினோம். எங்கள் பள்ளி பசுமை தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதில் எங்களது பங்கும் இருப்பது குறித்து தலைமையாசிரியருக்கும், சமூக ஆர்வலர் அசோக்குமாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றனர்.

Tags

Next Story