வாலாஜாபாத் பள்ளியில் ரூ.96 லட்சத்தில் சுகாதார வளாகம்
வாலாஜாபாத் பள்ளியில் ரூ.96 லட்சத்தில் புதிய சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை விழா நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இயங்கும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில், 560 மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்த போதுமான கழிப்பறை வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால், தேவையான கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை எழுந்தது.
அதன்படி, வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப் பள்ளியில், ஆண்களுக்கென நான்கு கழிப்பறைகள் மற்றும் பெண்கள் பயன்படுத்த நான்கு கழிப்பறைகள் என எட்டு அறைகள் கொண்ட சுகாதார வளாகம் கட்ட நபார்டு திட்ட நிதியின் கீழ், 96 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் அடிக்கல் நாட்டினார். வாலாஜாபாத் ஒன்றிய குழு துணை தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்."