பெருகி வரும் பன்றிகளால் சுகாதாரக் கேடு - மக்கள் அவதி !

பெருகி வரும் பன்றிகளால் சுகாதாரக் கேடு - மக்கள் அவதி !

பன்றி

ஆலங்குளம் பகுதியில் பெருகி வரும் பன்றிகளால் சுகாதாரக் கேடு மக்கள் அவதியடைகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மேற்குப் பகுதியில் வட்டாட்சியா் அலுவலகம் முதல் கிழக்கு வரிசையில் அரசு மேல்நிலைப் பள்ளி வரை 20- க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மழைநீரோடை தற்போது கழிவுநீா் ஓடையாகிவிட்ட நிலையில், அவற்றில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி சில தனி நபா்கள் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளா்த்து வருகின்றனா்.

இவை சாக்கடை நீரில் உருண்டு புரண்டுகொண்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், டிஎஸ்பி அலுவக எதிரே பழைய வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடம், கால்நடை மருந்தக வளாகம் ஆகியவற்றில் சுதந்திரமாக உலாவுகின்றன.

இதனால், இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், துா்நாற்றமும் வீசுகிறது. முக்கிய பணிக்காக அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் மக்களை இப்பன்றிக் கூட்டங்கள் அச்சுறுத்துகின்றன. இத்தகைய பன்றிகளை அப்புறப்படுத்தி அவற்றை வளா்ப்போா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பேரூராட்சித் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லையாம்.

இதனால், பன்றிகள் எண்ணிக்கையும், அதை வளா்ப்போா் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நீா் நிலைகளில் பன்றிகள் வளா்க்கக் கூடாது என்ற விதி இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் எவ்வித கட்டுப்பாடுமின்றி பன்றிகள் வளா்க்கப்படுவதாக ஆலங்குளம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

மேலும், பன்றிகள் இல்லா பேரூராட்சியாக ஆலங்குளத்தை மாற்ற சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags

Next Story