பட்டுக்கோட்டையில் கொட்டித் தீர்த்த கனமழை

பட்டுக்கோட்டையில் கொட்டித் தீர்த்த கனமழையால் தேங்கி நின்ற கழிவுநீரை சுத்தம் செய்த இளைஞர்களுக்கு பாராட்டு குவிந்தன.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி 16 ஆவது வார்டு பாக்கியா நகரில் பலவருடங்களாக பயன்பாட்டில் இருந்த பாசன வாய்க்காலில் கடந்த ஒரு வருடமாக, குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும், கழிவு நீர் கலந்தும் சாக்கடை நீர் வாய்க்காலாக காணப்படுகிறது. இப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் சூழலில், விஷப்பூச்சி, கொசு , பாம்புத் தொல்லையால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து பட்டுக்கோட்டை நகராட்சியில், இப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமையன்று மாவட்டத்திலேயே அதிக அளவாக 158 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. தற்போது பெய்த கோடை மழையால் சாக்கடை நீரும், மழை நீரும் சேர்ந்து, குப்பைகளால் அடைபட்ட நிலையில், தேங்கி இருந்த கழிவுநீர் குடியிருப்புக்குள் புகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ராஜ பிரபு, தமிழ், மூவேந்தர், தருமர், மாரிமுத்து ஆகியோர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், கழிவு நீர் வாய்க்காலை சுத்தம் செய்து, குப்பைகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றினர். இதனால் குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் சூழும் நிலை தவிர்க்கப்பட்டது. இளைஞர்களின் இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story