சேலம் மாநகர் பகுதியில் இரவில் கனமழை
சேலத்தில் கனமழை
சேலம் மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தம்மம்பட்டி, ஆணைமடுவு, வாழப்பாடி, ஏற்காடு, ஏத்தாப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
சேலம் மாநகரில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்ல. அதன்பிறகு இரவு 8 மணியளவில் கனமழை பெய்ய தொடங்கியது. கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், செவ்வாய்பேட்டை, பெரமனூர், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் பெய்த கனமழையால் சேலத்தில் கடும் குளிர் காற்று வீசியது.