திண்டிவனம் பகுதியில் பலத்த மழை

திண்டிவனம் பகுதியில் பலத்த மழை
புகைப்படம்
சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. மேலும் ஒரு சில நாட்கள் அவ்வப் போது கோடை மழை பெய்து பொதுமக்களை குளிர்வித்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மதியம் 4 மணி வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த சூழலில் மாலை 5.30 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. அடுத்த சில நிமிடத்தில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது, இந்த மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. குறிப்பாக காவேரிப்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை யில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதவிர திண்டிவனம் அரசு மருத்துவமனை, காந்திசிலை, தீர்த்த குளம் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றது. மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் மயிலம், கொள்ளார், ஒலக்கூர், மொளசூர், பிரம்மதேசம், தீவனூர், ஓமந்தூர் உள்ளிட்ட பகுதியிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.

Tags

Next Story