கோவை புறநகரில் வெளுத்து வாங்கிய கனமழை
வெளுத்து வாங்கும் கனமழை
தமிழகத்தில் கோடை வெயில் தணிந்து கோடை மழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை மிதமான மழையும் ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் கன மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்த நிலையில் கோவை புறநகரப் பகுதிகளான அன்னூர், எல்லப்பாளையம், குப்பேபாளையம்,
சர்க்கார் சாமக்குளம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.இதனால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
குப்பேபாளையம் பகுதியில் ஓடை ஒன்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் எல்லப்பாளையம் - பெரியநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதால் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மேட்டுப்பாளையம் பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.