குமரிக்கு கன மழை எச்சரிக்கை : கலெக்டர் ஸ்ரீதர் அறிக்கை

குமரிக்கு கன மழை எச்சரிக்கை : கலெக்டர் ஸ்ரீதர் அறிக்கை
ஆட்சியர்  ஸ்ரீதர்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவுறுத்தி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பலத்த மழையாகவும் மற்ற இடங்களில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகளில் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இந்த வாரம் முடியும் வரை குமரி மாவட்டத்தில் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் 17ஆம் தேதி நாளை மிதமான மழையும், 18ஆம் தேதி 19ஆம் தேதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம் ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மின் சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும்.

மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம். மழைக்காலங்களில் நீர் நிலைகளில் நீரின் வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம். கடலில் சீற்றம் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரை பகுதியில் செல்ல வேண்டாம். என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story