ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் துவங்கி தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரையில் கடும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் வெளியில் வர முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

இந் நிலையில் வெப்பச் சலனம் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி , மகாராஜபுரம், கோட்டையூர், பிளவக்கல் அணை , கோவிலாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெயில் தாக்கம் மற்றும் வெப்பாலை வீசியது. இதன் காரணமாக நேற்று மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையானது பெய்தது. இப்பகுதிகள் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசத் தொடங்கியது. ஒரு மணி நேரம் மழை பெய்ததால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அக்னி நட்சத்திர காலம் துவக்கத்தின் மழை பெய்ய துவங்கியதால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story