கடும் பனிப்பொழிவு; கத்தரி விளைச்சல் பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரினால் கத்தரி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, டிச.27: தர்மபுரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரினால் கத்தரி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தை மற்றும் வாரசந்தைக்கு கத்தரிக்காய் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி,பாலக்கோடு, பென்னாகரம்,நல்லம்பள்ளி,மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் கத்தரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த இரு வாரத்திற்கு முன் சாரல் மழை பெய்தது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் நிலவுவதால் கத்தரி செடிகளில் காய்கள் பிடிப்பு சரிந்துள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு கத்தரிக்காய் வரத்து வெகுவாக குறைந்து போனது.

தர்மபுரி உழவர் சந்தை, வாரச் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டில், கடந்த 4-ம் தேதி கத்தரிக்காய் கிலோ அதிகபட்சமாக ரூ.26க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் குறைந்ததால் இன்று கத்தரிக்காய் கிலோ ரூ38 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மாதம் கத்தரி விளைச்சல் அதிகரித்து, சந்தைக்கு வரத்தும் அதிகரித்தது.இதனால் விலை குறைந்தது. தற்போது கடும்பனிபொழிவினால் கத்தரி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து சரிந்துள்ளது. தர்மபுரி உழவர் சந்தையில் விற்பனைக்கு வரும் கத்தரி காய்கள், உடனடியாக விற்று தீர்ந்து விடுகிறது' என்றனர்.

Tags

Next Story