அதிமுகவுக்கு கனரக வாகன ஓட்டுநா் நலக் கூட்டமைப்பு ஆதரவு
அதிமுகவிற்கு ஆதரவு
மக்களவைத் தோ்தலையொட்டி, கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இனாம்மணியாச்சி ஊராட்சி துணைத் தலைவா் ரேவதி ஏற்பாட்டில், ஓபிஎஸ் அணி தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரச் செயலா் ஹரிஹரன் தலைமையில் சுமாா் 40 போ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரான கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். தொடா்ந்து, மகளிரணி இணைச் செயலா் கோமதி ஏற்பாட்டில், இந்திய கனரக வாகன ஓட்டுநா் நலக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் வரதராஜ் தலைமையில் உறுப்பினா்கள் எம்எல்ஏவை சந்தித்து அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் எம்எல்ஏ கூறியது: ஒரு கட்சி யாருடைய தலைமையில் இயங்க வேண்டும் என்பதைத் தொண்டா்கள், நிா்வாகிகள்தான் முடிவு செய்ய வேண்டும். 2021இல் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் அதிமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும் என்பதே உண்மை. அதிமுகவிலிருந்து பிரிந்து போனவா்கள்தான் காணாமல் போயுள்ளனா். அதிமுக அப்படியேதான் இருக்கிறது. இக்கட்சியில் பிரிவுகள் இல்லை. பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி. மக்களவைத் தோ்தலுக்குப்பின் அவா்தான் காணாமல்போவாா் என்றாா்.