தேவகோட்டை நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் 'செக்'

தேவகோட்டை நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் செக்
X

குப்பை தேக்கம்

தேவக்கோட்டை நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளைக் கொட்ட உயர்நீதிமன்றம் விதித்த தடையால், நகராட்சி நிர்வாகம் சிக்கலில் தவித்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகளில் தினமும் 15 டன் குப்பை சேகரமாகிறது. அவற்றை, நகராட்சி நிர்வாகத்தினர் காரைக்குடி அருகே ரஸ்தா குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர்.

இந்நிலையில், குப்பைகளை ரஸ்தா குப்பைக் கிடங்கில் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அங்கு குப்பைகள் கொட்டப்படுவதில்லை. பின்னர் தேவகோட்டை நகராட்சி பகுதியிலேயே குப்பைகளை ஆங்காங்கே கொட்டி வந்தனர்.

இதற்கும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மாரிச்சான்பட்டி பகுதியில் குப்பையை கொட்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் அப்பகுதியில் கொட்டுவதற்கு மாரிச்சான்பட்டி தச்சவயல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் குப்பையால் விரிசுழியாற்றில் இருந்து செல்லும் தளக்காவயல் கால்வாய் அடைந்து கொண்டது. இதனால் தளக்காவயல், மானம் பூ வயல், நல்லாக்குடி, சாத்திக்கோட்டை, மாவிடுதிகோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குப்பை கொட்டும் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த தடை விதித்தது. இதையடுத்து, நகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளைக் கொட்ட இடமின்றி நகராட்சி நிர்வாகம் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Tags

Next Story