ஊட்டியில் உயர்மட்ட மேம்பாலம் !

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக விரிவான திட்டஅறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரி தகவல்.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் லவ்டேல் சந்திப்பில் இருந்து சேரிங்கிராஸ் வரை ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலை ரூ. 32 கோடியில் விரிவுபடுத்தப்பட உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா, கேரளா மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்நாடக, கேரள சுற்றுலாப் பயணிகள் கூடலூர் வழியாகவும், கோவை உள்பட பிற்பகுதியில் இருந்து வருபவர்கள் குன்னூர், கோத்தகிரி சாலை வழியாகவும் வருகின்றனர். இதனால் ஊட்டி- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சீஸ்ன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நாளில் வருவதால் குன்னூர் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும். விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகள் சமீபத்தில் நிறைவுபெற்றது .

ஊட்டி -மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டாலும் ஊட்டி நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஊட்டி -மேட்டுப்பாளையம் சாலையில் லவ்டேல் சந்திப்பில் இருந்து சேரிங் கிராஸ் வரை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ராஜா கூறியதாவது: 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியமிக்க இந்த வழித்தடம் கால மாற்றத்திற்கு ஏற்ப தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை 14 கி.மீ., தூரத்திற்கு ரூ.35 கோடியும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை 14 கீ.மி., தூரத்திற்கு ரூ.27 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. இதனால் சுமார் 7 மீ., இருந்த சாலை எங்கெல்லாம் இடம் உள்ளதோ அங்கு எல்லாம் அதிகபட்சமாக 10 மீ., வரை அகலப்படுத்தப்பட்டது. மேலும் சாலையோரம் தேவைப்படும் இடங்களில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. அதேபோல் மண் சரிவை தடுப்பதற்காக சோதனை முயற்சியாக குன்னூர், மந்தாடா பகுதிகளில் உயர் தொழில்நுட்பத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் ஊட்டி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால் அதை குறைக்க லவ்டேல் சந்திப்பில் இருந்து சேரிங்கிராஸ் வரை சாலையை அகலப்படுத்த ரூ. 32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிங்கர் போஸ்ட் பகுதியில் ஒரு சில இடங்களிலும், குன்னூரில் ஒரு சில இடங்களிலும் சாலை அகலப்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும். மேலும் சேரிங்கிராஸ் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story