+2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி பனையூர் மு. பாபு பவுண்டேஷன் மற்றும் ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பவுஞ்சூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில்,ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் வீரபாபு, பாட்டிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மொழித்துறை தலைவர் ராஜசேகர், ஆர் எம் பொறியியல் கல்லூரி முதல்வர் முகமது அப்துல் காதர், மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் அமுல் சோபியா ஆகியோர் உயர்கல்வி படிப்பது குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு பேசுகையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள நான் முதல்வன் திட்டத்தில் கிராமப்புறங்களில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளியவர்களுக்கு எதிர்காலத்தில் எந்தத் துறையில் என்ன வேலை வாய்ப்புகள் உள்ளது குறித்து விரிவாக வழிகாட்டப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆகிய திட்டங்களால் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியும் மாணவர்களின் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக திகழ்கிறார் என பேசினார். மேலும் மதுராந்தகம் அருகே உள்ள ஆர்.எம்.பொறியியல் கல்லூரியில் இலவசமாக பொறியியல் படிப்பு சேர்வதற்காக ஆணையினை எம்எல்ஏ பாபு 20 மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பாபு, சிற்றரசு, பேரூர் செயலாளர் மோகன்தாஸ், செயற்குழு உறுப்பினர் வெளிக்காடு ஏழுமலை, ஒன்றிய துணை செயலாளர்கள் நாகப்பன், குமுதம் மதுரை, அவைத்தலைவர் வரதராஜன், திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு, கவுன்சிலர் சுஜாதா உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் வழக்கறிஞர் விஜயகுமார் நன்றி கூறினார்.