கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக்கோரி நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரத போராட்டம்
கட்டுமான பொருட்களின் விலை
கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக்கோரி நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரத போராட்டம் சேலத்தில் இன்று நடக்கிறது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அண்மைக்காலமாக அரசின் ஒப்பந்த பணிகளுக்கு தேவையான அடிப்படை கட்டுமான பொருட்களான ஜல்லி, ஜிப்ஸ், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை 80 முதல் 110 சதவீதம் வரை திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே தனியார் கிரசர் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஜல்லி, ஜிப்ஸ் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை அரசு தனி ஆணையம் அமைத்து உடனடியாக கட்டுப்படுத்திட வேண்டும் என்றும், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலான நியாயமான கோரிக்கையினை அரசு கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் இன்று (வியாழக்கிழமை) சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் திருசங்கு, மேற்கு மண்டல பொறுப்பாளர் காமராஜ்,மாவட்டத் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்ததாரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story