கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

X
ஆலோசனை கூட்டம்
அரசு சார்பில் முத்தரப்பு கூட்டம் நடத்தி கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என சேலத்தில் நடந்த நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோவை மண்டலத்தில் ஜல்லி மற்றும் எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலை 40 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு சார்பில் முத்தரப்பு கூட்டம் நடத்தி உரிய தீர்வு காண வேண்டும், மேலும் ஒழுங்குமுறை ஆணையம் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் பேசும் போது, செயற்கையான விலையேற்றத்தை கண்டித்து விரைவில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். அதன்பிறகும் விலை குறையாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர் காமராஜ், முன்னாள் தலைவர் கார்மேகம், முன்னாள் எம்.எல்.ஏ. கோபால் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ், சஞ்சய்காந்தி, சிவபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
