வரலாற்று பெருமைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்: தருமை ஆதீனம்
பள்ளிகளில் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் மாணவர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலை செயல்படுத்த வேண்டும். நமது பண்பாடு, வரலாற்று பெருமைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டியது அவசியம் என தருமை ஆதீனம் பேட்டி. திருபுவனம் சரபர் தலமான கம்பகரேஸ்வரர் கோயிலில் ஆனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கம்பகரேஸ்வரர், தர்ம சம்வர்த்தினி, சரபருக்கு உலக நலன் வேண்டி சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் ஹோமம் நடந்தது.
தொடர்ந்து உற்சவர் சரபர் முன் மண்டபம் எழுந்தருள சகஸ்ரநாம அர்ச்சனையுடன் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதில் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் திருபுவனம் கிளை மடத்தில் தருமை ஆதீனம் 27 வது குருமகாசந்நிதானத்தை சந்தித்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு வாழ்க்கை முறை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடினர். தொடர்ந்து கோயில் பிரசாதம் மற்றும் சரபர் படத்தை சுவாமி விமூர்த்தானந்தருக்கு ஆதீனம் வழங்கினார்.
புதுச்சேரி சட்டத்துறை செயலாளர் நீதிபதி சத்தியமூர்த்தி உடன் இருந்தார். அப்போது தருமை ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தொடர்ந்து பொறுப்பேற்று இருப்பது பாராட்டுக்குரியது. அவரது நல்லாட்சி தொடர வாழ்த்துகின்றோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆன்மீக சம்பந்தமாக பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது சிறப்புக்குரியது. இரண்டு நாட்கள் விழாவாக நடைபெறும் மாநாட்டில் பல உலக நாடுகளில் இருந்து தமிழர்கள் கலந்து கொள்கிறார்கள். முருகு என்றால் தமிழ்.
தமிழ் கடவுளாக விளங்குகின்ற முருகப்பெருமானை போற்றும் விதமாகவும் பலர் கட்டுரை அளிக்கவும், பல தலைவர்கள் கலந்து கொள்ளவும் இந்த மாநாடு ஏற்பாடாகி இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இதில் அக்கறை செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்று பள்ளிகளில் சமய கல்வியை அளிக்கும் வகையில் மாணாக்கர்களுக்கு நீதி போதனை போன்றவைகள் ஏற்கனவே இருந்த மாடல் கிளாஸ் போல் தொடர்ந்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பண்பாட்டோடு கூடிய கல்வியை மாணவர்கள் பெற முடியும்.
ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் மாணவர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதற்கும், கேட்பதற்குரிய உரிமை கொடுத்தால்தான் மாணவர்களை நல்ல முறையில் நெறிப்படுத்த முடியும். அன்று ஆசிரியர்கள் பண்பாட்டை போதிக்கின்றவர்களாக அந்த தரத்தோடு இருந்தார்கள். அதே நிலை மீண்டும் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம். நமது நாட்டின் வரலாறுகள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். இப்போது சமூக அறிவியல் பாடத்தில் நமது நாட்டினுடைய பண்பாட்டை பெருமைப்படுத்தும் வரலாற்று நிகழ்வுகள் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் பாடங்களை நெறிப்படுத்த வேண்டும். அதேபோன்று பல இடங்களில் விளையாடுவதற்கு அனுமதி கொடுக்காமல் இருக்கிறார்கள். சதுரங்கம்,கோ- கோ போன்றவை எல்லாம் தேவாரம் பாடல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
விளையாட்டுக் கல்வி அவசியம் அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு அவசியம் என்பதை செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். பண்புடைய கல்வியை கற்க வைப்பதற்கு தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. அதேபோன்று சிறப்பிடம் பெரும் மாணவர்களை கவுரவிப்பதும், அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் போன்றவைகளை எல்லாம் சீர்திருத்தம் பண்ண வேண்டும் என்று அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது என்றார்.