தொடர் விடுமுறை : ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை சீஸனுக்காக சுற்றுலா தளங்களை தயார் செய்யும் பணிகள் நீலகிரி மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல் கோடை விழாவுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. புனித வெள்ளியை தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களால் நீலகிரிக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. கடந்த 3 நாட்களாக தினசரி 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து சென்றுள்ளனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலர்கள், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலைப்பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மலை ரயிலில் உற்சாகமாக பயணம் செய்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் படகு சவாரி செய்தனர்.
இந்நிலையில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனம் மற்றும் வாடகை வாகனங்களில் வருவதால், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை மற்றும் கூடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 50,000 சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சுற்றுலா வந்து சென்றுள்ளனர். வரும் நாட்களில் தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் நிறைவடையவுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.