விழுப்புரத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

விழுப்புரத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

விழுப்புரத்தில் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தினர் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரத்தில் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தினர் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக் கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரத்தில் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலுள்ள அரசுக் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக கௌரவ விரிவுரையாளர்களாக ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தங்களை பணி நிரந்தரம் செய்யாமல் வேறு எந்தவித நியமனமும் மேற்கொள்ளக்கூடாது என இடைக்காலத் தீர்ப்பையும் கௌரவ விரிவுரையாளர்கள் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் அரசுக் கல்லூரிகளில் 4,000 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. அரசின் இந்த நடவடிக்கையால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக் கல்லூரிகளில் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் 4000 கௌவர விரிவுரையாளர்கள் பணியிழக்கும்சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தினர் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாயில் முழக்கப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தின் மண்டலக்குழுத் தலைவர் ஆரிமுத்து தலைமை வகித்தார். கிளைத் தலைவர் செல்வகுமார், செயலர் முருகேசன், பொருளாளர் பச்சையப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து கௌரவ விரிவுரையாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story