மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்
தேனி மாவட்டம் பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் QPMS என்ற நிறுவனத்தின் மூலம் மருத்துவமனை துப்புரவு பணிகள், சமையல் உதவியாளர், பாதுகாவலர்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெண்கள் உட்பட 80 நபர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் 609 ரூபாய் வழங்க உத்தரவிட்டும் ஒப்பந்த நிர்வாகம் 285 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதாகவும், தமிழ்நாடு தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்களின்படி அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தேனி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம், காவல்துறையினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நிலையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படாததால் நேற்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இதனிடையே நேற்று மீண்டும் தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் மாதம் ஊதியம் 8500 ரூபாயில் இருந்து 11500 ரூபாய்க உயர்த்தி வழங்குவதாகவும், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அளிக்கப்படும் சலுகைகள் வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதால் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால் வழக்கம்போல் தங்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர்.