வீட்டுமனை பட்டா வழங்கல்
பட்டா வழங்கல்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.பட்டணம் பேரூராட்சி பகுதியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நட்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் எம்பி., ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், பங்கேற்று ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நட்டு வைத்து, 40 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். பட்டணம் பேரூராட்சி, களரம்பள்ளி தெருவில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, தலா ரூ.6லட்சம் மதிப்பீட்டில் , நேருநகர், காந்திநகர், மேட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் பொருத்தி, சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் , களரம்பள்ளி கிரிவலப்பாதையில் மின்கம்பத்துடன் கூடிய 33 தெரு மின்விளக்குகள் அமைக்கும் பணி, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் போதமலை குட்டையினை மேம்பாடு செய்யும் பணி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலதன திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மேட்டாங்காட்டில் புதியதாக நூலகம் கட்டும் பணி, 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்-15, குச்சிக்காடு பகுதியில் புதியதாக பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி, பெரிய ஏரி வயக்காடு பகுதியில் ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் தரைபாலம் அமைக்கும் பணி என மொத்தம் 1.22 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் மா.மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கார்கூடல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 40 பயனாளிகளுக்கு ரூ.39.60 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினர்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசுவாமி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், பட்டணம் பேரூராட்சி துணைத்தலைவர் பொன்நல்லதம்பி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் கே.பழனி, ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.