தர்மராஜா கோவில் தேர்த்திருவிழா - துடைப்பம்,முறத்தால் அடித்து நேர்த்திக்கடன்
ஒசூர் அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் சுமார் 400 ஆண்டு காலம் பழமை வாய்ந்த தர்மராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் தேர்த்திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து பல்வேறு பூஜைகளுடன் வெகு விமர்சையாக நடைப்பெறுவது வழக்கம். இந்த கோயிலில் ஒசாபுரம் - கூட்டூர் கிராமம் முதல் டி.கொத்தப்பள்ளி கிராமம் வரை உள்ள 27 கிராம மக்கள் ஒன்று கூடி தேர் இழுத்து வழிபடுவார்கள்.
அந்த வகையில் 385 வது ஆண்டாக நேற்று திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கடந்த மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவில், தினமும் திரௌபதி அம்மனுக்கும் தர்மராஜருக்கும் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தர்மராஜ சுவாமி உற்சவர் மூர்த்தி அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட திருத்தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரின் வடங்களை பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, 10 நாட்களும் உணவின்றி விரதம் இருக்கும் இக்கோயிலின் பூசாரி மீது, தர்மராஜ சுவாமியே இறங்கி வந்து அருள் பாலித்து ஆசீர்வதிக்கும் விதமாக, பக்தர்கள் மீது துடைப்பம் மற்றும் முறத்தால் அடித்து அருள் கூறினார். இதில் ஏராளமானவர்கள் துடைப்பம் மற்றும் முறைத்தால் அடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். இதனால், குழந்தை பாக்கியம், கடன் பிரச்சனைக்கு தீர்வு, திருமண தடை நீங்கி குடும்பங்களில், அமைதி நிலவுவதுடன் பில்லி சூனியம், பேய், பிசாசு, வேண்டாமை நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. துடைப்பம் மற்றும் முறத்தால் அடிவாங்கும் வினோத வழிப்பாட்டினை காண தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்று தர்மராஜாவை வழிபட்டனர்.