குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய ஓசூர் போலீசார்

குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை  கொண்டாடிய ஓசூர் போலீசார்

பொங்கல் கொண்டாட்டம்

குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை ஓசூர் போலீசார் கொண்டாடினார்.

தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்கூட்டியே பள்ளி கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் ஓசூரில் காவல்துறை சார்பில் போலீசார் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். ஓசூர் காவல் சரகத்தில் உள்ள ஓசூர், அட்கோ, சிப்காட், மத்திகிரி, பேரிகை, பாகலூர், சிப்காட் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம்,

குற்றப்பிரிவு ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் காவல் துறையினர் அவர்களது குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் விழாவை ஒட்டி கரும்புகளால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பெண் காவலர்கள் புது பானைகளில் பொங்கலிட்டனர்.

இதில் நல்ல சுவையுடன் பொங்கல் வைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல இந்த விழாவில் பொங்கலை முன்னிட்டு அழகாக கோலங்கள் இட்ட பெண் காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்காக தனி நடுவர் குழுவும் ஏற்படுத்தப்பட்டு சுவை மிகுந்த சர்க்கரை பொங்கல் மற்றும் கோலங்கள் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இது தவிர தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளையும் காவலர்கள் குடும்பத்துடன் விளையாடினர். கயிறு இழுத்தல், உறியடி, மற்றும் மியூசிக்கல் சேர் ஆகிய விளையாட்டுகளில் ஆண் பெண் காவலர்கள் மகிழ்ச்சி பொங்க கொண்டாட்டத்துடன் கலந்து கொண்டனர்.

இது தவிர காவலர்களின் பிள்ளைகளும் அங்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

பல்வேறு பணி சுமைகளுக்கு மத்தியில் இன்று ஒரு நாள் காவலர்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடியது அவர்களது குடும்பத்தாரை மகிழ்ச்சி பொங்க வைத்தது.

Tags

Next Story