கூடுதலாக ரூ.6.50 வசூலித்த ஓட்டலுக்கு ரூ.3,000 அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம்
பைல் படம்
நாமக்கல், மோகனூர் சாலையில் வசித்து வரும் சுப்பராயன் (82), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள பிரபலமான அசைவ ஹோட்டலில் ரூ.143 செலுத்தி சிக்கன் சூப் பார்சல் வாங்கியுள்ளார். அதற்கு வழங்கப்பட்ட ரசீதில் பார்சல் கட்டணம் ரூ.6.50 என தனியாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. பார்சலுக்கு தனி கட்டணம் வசூலித்தது உணவகத்தின் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என சுப்பராயன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று அதன் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி பார்சலுக்கு கட்டணம் பெற்றுக்கொண்டு ஹோட்டலின் பெயரும், முகவரியும் அடங்கிய விளம்பரத்துடன் வாடிக்கையாளருக்கு பார்சல் வழங்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது பார்சலுக்கு தனி கட்டணம் வசூலிக்கும் போது சொந்த விளம்பரத்தை செய்தது ஹோட்டலின் நியாயமற்ற வர்த்தக நடைமுறை. எனவே வாடிக்கையாளர் பார்சலுக்காக செலுத்திய ரூ.6.50 மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2000, வழக்கு செலவு தொகையாக ரூ.1,000 ஆகியவற்றை வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஹோட்டல் நிர்வாகம் 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.
மேலும், ஹோட்டல் உரிமையாளர் ஒரு வார காலத்திற்குள் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ஆஜராகி பார்சல் கவரில் விளம்பரம் செய்தால் பார்சல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என உறுதி மொழியை வழங்க வேண்டும். இதனை செய்யத் தவறினால் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு ஹோட்டல் லைசென்ஸ் ரத்து செய்ய உத்தரவிடப்படும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.