தட்டார்மடம் அருகே வீடு புகுந்து நகை கொள்ளை: சிறுவன் உட்பட 3பேர் கைது

தட்டார்மடம் அருகே வீடு புகுந்து  நகை கொள்ளை: சிறுவன் உட்பட 3பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

தட்டார்மடம் அருகே வீடுபுகுந்து ரூ.2½ லட்சம் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இளஞ்சிறார் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே படுக்கப்பத்து அழகம்மன்புரம் பகுதியை சேர்ந்த இசக்கி மகன் இசக்கிராஜா (59). இவர், கடந்த 2-ந் தேதி காலையில் மனைவியுடன் நாசரேத்தில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த இசக்கிராஜாவின் தந்தை இசக்கி வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார். அன்று மதியம் அவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து பதறிப்போன அவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது.

அதில் இருந்த 69 கிராம் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து ெசன்றது தெரியவந்தது. இதுகுறித்து இசக்கிராஜா அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி மேற்பார்வையில்,

தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் டேவிட் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வீட்டில், தட்டார்மடம் காந்திபுரி வடக்கு தெருவை சேர்ந்த சித்திரைவேல் மகன் ஆனந்த் (33), தாண்டவன்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் ராஜன் (22) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோர் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொர்ந்து தனிப்படை போலீசார் ஆனந்த், ராஜன் உள்ளிட்ட 3பேரையும் கைது ெசய்தனர். அந்த 3பேரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான 67 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன. இந்த கொள்ளை வழக்கில் துரிதமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்து தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Tags

Next Story