நாகர்கோவிலில் வீட்டை உடைத்து திருட்டு - சிக்கிய 3 பேர்
கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் ராஜீவ் காந்தி நகரில் கடந்த 7-ம் தேதி இரவு நேரத்தில் வினோத் சைமன் என்பவரின் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகைகளை திருடி சென்றதாக வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி குற்றவாளிகளை பிடிக்க நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மேற்ப்பார்வையில் வடசேரி காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியை சார்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் மூர்த்தி(49), கிருஷ்ணகிரி மாவட்டம் பச்ச கார்னர் பள்ளி, பெல்லாரன் பள்ளியை சார்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் ரமேஷ்(48), தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியை சார்ந்த காவேரி என்பவரின் மகன் ராமமூர்த்தி(48) ஆகியோர் தொழில்நுட்ப உதவியுடன் அடையாளம் காணப்பட்டனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையினர் தீவிரப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு திருட்டு போயிருந்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டது. மேலும் இவர்கள் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளார்களா? என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.