வீடியோ எடுத்து மிரட்டும் ஹவுஸ் ஓனர்... கதறும் பெண்

வீடியோ எடுத்து மிரட்டும் ஹவுஸ் ஓனர்... கதறும் பெண்

நாமக்கல் எஸ்.பியிடம் பெண் புகார்

தனது அந்தரங்கத்தை வீடியோவாக எடுத்து முன்னாள் வீட்டு ஓனர் மிரட்டி வருவதாக கணவனை இழந்த பெண் கண்ணீர் மல்க நாமக்கல் எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது கணவர் மணிகண்டன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 12 வயதில் ஒரு மகனும் 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இவர் தையல் மெஷின் வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த 2021 ஆம் வருடம் காந்தி நகரைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரது லைன் வீடு, அபெக்ஸ் காலனியில் உள்ளது. அங்கு வாடகைக்கு குடி புகுந்தார். கட்டிடத்தின் உரிமையாளர் சரவணகுமார் ஜோதிமணிக்கு உதவுவது போல் நடித்து, அவரது வீட்டில் கேமராக்களை வைத்து ஜோதி மணியின் அந்தரங்கங்களை படம் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டி உள்ளார். இந்நிலையில், இதுகுறித்து குமாரபாளையம் காவல்துறையிடம் கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி புகார் அளித்த நிலையில், சரவணக்குமார் குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி, தன்னிடம் வீடியோ மற்றும் போட்டோக்கள் எதுவும் இல்லை எனவும், அந்த வீடியோ மற்றும் போட்டோக்களை அழித்து விட்டதாகவும் தெரிவித்து, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்.

அதன் பின்னர் கடந்த 1ஆம் தேதி சமூக வலைதளங்களில் ஜோதி மணியின் புகைப்படத்தை வெளியிட்டு, அதில் குமாரபாளையம் நகரச் செயலாளர் பேசுவது போல் சித்தரித்து, பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து வாட்ஸ் அப் குழுவில் பதிவேற்றம் செய்த சரவணக்குமார் விக்கி, விவேக், பாலாஜி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சரவணகுமார் வைத்துள்ள, எனது அந்தரங்க வீடியோக்களை பெற்று நிரந்தரமாக அழிக்க வேண்டும் என்றும், திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பனிடம் ஜோதிமணி புகார் செய்தார்.

இது குறித்து ஜோதிமணி கூறியதாவது, 'எனது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நான் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு, குமாரபாளையம் சரவணகுமார் என்பவரது லைன் வீட்டில் குடியிருந்தேன். அவர் எனக்கு உதவுவது போல் வந்து என் வீட்டில் கேமரா வைத்து எனது அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்து மிரட்டி வருகிறார். என்னோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். இதனால் நான் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்த போதும், என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார். தற்போது நானும் அதிமுக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் அந்தரங்கமாக பேசுவது போல் சித்தரித்து ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை தடுக்க நடவடிக்கை எடுத்து போலியான ஆடியோ பதிவை வெளியிட்ட சரவணகுமார் உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் எனது குழந்தைகளுடன் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் இது குறித்து திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பனிடம் கேட்டபோது புகார் மனு மீது விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் சமூக வலைதளங்களில் பரப்பியது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினரும் விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்

Tags

Next Story