மீனவர்களுக்கான வீட்டு வசதி திட்டம் ; பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தது வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்றில் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய நீலப்புரட்சி திட்டத்தின்கீழ்; ஒருங்கிணைந்த மீனவர்களின் மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தில் மீனவர்களுக்கு வீடுகட்டும் திட்டத்தினை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் மீனவர்களுக்கான இலவச வீட்டு வசதி திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு வீட்டிற்கு அலகு தொகை ரூ.2.40 இலட்சம் வழங்கப்படும்.
மீனவர்/மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். உறுப்பினர் பெயரில் குறைந்தது 25-சதுர மீட்டர் பரப்பளவு உள்ள பட்டா இருக்க வேண்டும். தற்சமயம் குடிசை வீட்டில் வசிக்கும் பயனாளிகளை இத்திட்டத்தின்கீழ் அவர்கள் வசிக்கும் குடிசை வீட்டினை நிரந்தர வீடாக மாற்றிக்கொள்ளலாம். பயனாளியின் பெயரில் வேறு எங்கும் கான்கிரீட்/நிரந்தர (Pucca) வீடுகள் இருத்தல் கூடாது. பயனாளி அரசின் வேறு எந்த வீட்டு வசதி திட்டத்திலும் பயனடைந்திருத்தல் கூடாது.
இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
