திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் !
மனித சங்கிலி போராட்டம்
சிவகங்கையில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பொதுமக்கள் ஒரு அடி கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என பேசினார். போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை பேருந்து நிலையம் எதிரே மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்றதுடன் தொண்டர்கள் மத்தியில் பேசினார். நாடு முழுவதும் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றும் பெற்றோர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் தன்னுடைய பிள்ளைகள் பெரிய பதவிகளில் வரவேண்டும் என கனவு கண்டு கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதால் அது நாட்டை பாழ்படுத்தும் என்றும் பேசியதுடன் இதனை கட்டுப்படுத்த இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் கடத்துபவர்களுக்கு துணை போகிறது. எனவே வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஒரு அடி கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என்றுபேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்று திமுக அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Next Story