சிவகாசி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில், தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், திருத்தங்கல் அண்ணா சிலையில் ஆரம்பிக்கப்பட்டு அதிமுக கட்சியினர் காவராஜர் சிலை வரை கை கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, தமிழகத்தில் போதை பொருட்களை தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்கு திமுக கட்சியினர் சிலரே காரணம் என்றும்,
போதை பொருட்கள் கடத்தலில் சிக்கியிருப்பது திமுக கட்சியினர் என்றும், போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மனித சங்கிலி போராட்டத்தில், திருத்தங்கல் பகுதி கழக செயலாளர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னனி நிர்வாகிகள் உள்பட அதிமுக கட்சியின் ஆண்,பெண் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.