வேலூர் அருகே மனுநீதி நாள் முகாம்.

வேலூர் மாவட்டம், கீ.வ. குப்பம் வட்டம், தொண்டான் துளசி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் 102 பயனாளிகளுக்கு ரூ . 49. 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது, தொண்டான் துளசி ஊராட்சியில் மொத்தம் 8 குக்கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த குக்கிராமங்களின் மொத்த மக்கள் தொகை 1820. இந்த கிராமங்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், அலுவலர்களின் ஆய்வு அறிக்கைகள் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இக்கிராமங்களில் குடிநீர் வசதி, கழிவுநீர் வெளியேற்றும் வசதி, குப்பைகளை அகற்றுதல் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொண்டான்துளசி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த குக்கிரமங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊரக வளர்ச்சி துறை மூலம் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மனுநீதி நாள் முகாமில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விவரங்களை விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். மேலும் சுகாதாரத் துறையின் மூலம் குறிப்பாக கருவுற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவர்கள் கருவுற்ற மாதம் முதல் குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை செவிலியர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
மேலும் அவர்களுக்கு தேவையான நேரங்களில் சத்தான உணவு வகைகளும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் இது போன்ற சிறப்பான திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
