மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
கொலை செய்தவர் கைது
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கருப்ப பிள்ளைபுதூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் எழில்அன்பன். இவரது இரண்டாவது மனைவி பழனியம்மாள் வயது 45. இவர்களுக்கு கடந்த 23 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆயினும் கடந்த 2- வருடங்களாக குடும்பத் தகராறு காரணமாக இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 10 மணியளவில் அருகில் உள்ள சூரிபள்ளி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு இருந்தார் பழனியம்மாள். அங்கு வந்த எழில்அன்பன் பழனியம்மாள் பெயரிலிருந்து சொத்துக்களை, தனது பெயருக்கு பெயர் மாற்றம் செய்து தர கேட்டுள்ளார்.
ஆனால், பழனியம்மாள் இதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால், கோபமடைந்த எழில் அன்பன், பழனியம்மாளை தகாத வார்த்தை பேசி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பழனியம்மாளை தாக்கி துன்புறுத்தி உள்ளார். இதில் பழனியம்மாளுக்கு முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சொத்துக்காக மனைவியை கத்தியால் தாக்கிய எழில் அன்பனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.