பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
பச்சையப்பன்
திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுகா வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் ஷாலினிக்கும் (23), விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டையை சேர்ந்த பழனி மகன் பச்சையப்பன் (36) என்பவருக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களில் இருந்தே பச்சையப்பனும், அவரது தாய் பத்மினியும் சேர்ந்து ஷாலினியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதன் காரணமாக ஷாலினி, கடந்த 5.12.2020 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஷாலினியின் தந்தை சேகர், அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் ஷாலினியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் பச்சையப்பன், மாமியார் பத்மினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட பச்சையப்பனுக்கு 7 ஆண்டு சிறை தண்ட னையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், பத்மினியை விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட பச்சையப் பன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோதண்டபாணி ஆஜரானார்.