நாமக்கல் மாவட்டத்தில் லாரி தொழில்களை மேம்படுத்துவேன்: திமுக வேட்பாளர்
செய்தியாளர் சந்திப்பு
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக V.S. மாதேஸ்வரன் நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் E.R. ஈஸ்வரன் மற்றும் தொகுதி வேட்பாளர் V.S. மாதேஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா S. செந்தில் ஆகியோர் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் V.S. மாதேஸ்வரன், இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்து, பிரசித்தி பெற்ற தொழிலாக வழங்கும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் லாரிகள் மற்றும் சரக்கு லாரிகள் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் லாரி தொழிலை மேம்படுத்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பொருள்களுக்காக வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் இச்சொல்லுக்கு வழங்க முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து கூட்டாக பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன்,
இப்பகுதியில் ஜவுளி தொழில் அதிகம் உள்ளதால் சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தி தர ஒருங்கிணைந்த வர்த்தக ஜவுளி சந்தை / மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுகுறு தொழிலுக்கு வருமானவரித் துறை மூலம் விதிக்கப்பட்டுள்ள, தொகை செலுத்துவதற்கான 45 நாள் கால அவகாசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நீக்கி, சிறு குறு தொழில் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல்லுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி முட்டை ஏற்றுமதி மண்டலம் அமைக்கவும் அதன் தொடர்ச்சியாக கோழியின ஆராய்ச்சி மையம் அமைக்கவும் முழு முயற்சி எடுக்கப்படும். சங்ககிரி R.S. பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தற்போது பழைய இரயில்வே பாலத்திற்கு, அரை கிலோ மீட்டர் தொலைவில் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் குறையும். நாமக்கல் மாவட்டத்தில், காவிரி- திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளின் இணைப்பிற்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான நிதி தேவைப்படுவதால் எங்களது வேட்பாளர் வெற்றி பெற்று வந்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து பொதுமக்கள், விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் அந்தத் திட்டம் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்
நாளை (25.3.2024) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் பிரச்சாரங்களுக்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்து நாளை (25.3.2024) மாலை இராசிபுரத்தில் இருந்து தேர்தல் பிரச்சார பணிகள் முழு வீச்சில் தொடங்கும். இந்தியா கூட்டணிகள் அங்கம் வகிக்கும் ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கூட்டணிக்கு பெரும் பலமாக அமைந்து வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளார்கள்.
மீண்டும் BJP ஆட்சியில் வரக்கூடாது என்பது மக்கள் உணர்வாக உள்ளது. அதன் அடிப்படையில்தான் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். பிஜேபியின் பி டீமாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியை குறித்து எந்தவித குறையும் கூறாமல் உள்ளார்.
எனவே அதிமுகவுக்கு வாக்களித்தால் ஒரு வேளை அது பிஜேபியை பலப்படுத்தும் என்ற நிலை உள்ளது. எனவே அனைவரும் பிஜேபியை நிராகரிக்க தயாராகி விட்டார்கள். அதன் வெளிப்பாடாக உதயசூரியன் சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க தயாராகி விட்டனர் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் E.R. ஈஸ்வரன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், நாமக்கல் மக்களவைத் தொகுதியில், திமுக தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களிடம் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நல்ல எழுச்சி ஏற்பட்டு மோடி எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. மேலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மக்களோடு இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர் V.S. மாதேஸ்வரன் வெற்றி பெறுவார் எனக் கூறினார் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, இந்தியா கூட்டணி ஆதித்தமிழர் பேரவை மாவட்ட-ஒன்றிய-நகர நிர்வாகிகள், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.